Australian Consulate-General
Chennai, India

Media release

 பிப்ரவரி 9, 2016                                                                                                                                                                                                                               PA-CN/16/04      

   

ஆஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியாக அமலில் உள்ளன

ஆஸ்திரேலியாவின் பிராந்திய செயல்முறை மையங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொண்ட சவாலுக்கு ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பினைத் தொடர்ந்து,  அந்நாட்டின் குடி நுழைவு மற்றும் எல்லை பாதுகாப்புத் துறையின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு பீட்டர் டட்டன் அவர்கள், ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

 

சட்டவிரோதமாக பிறநாட்டு மக்கள் ஆஸ்திரேலியாவினுள் நுழைவதை தடுக்கவும், ஆஸ்திரேலிய எல்லைகளின் அரசுரிமையை உறுதிப்படுத்தவும், ஆஸ்திரேலிய அரசு கடுமையான எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை முழு மூச்சில் அமல்படுத்தி வருகிறது.

 

ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, பிராந்திய செயல்முறை தொடர்ந்து நீடிப்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது எல்லை அரசுரிமை இயங்குமுறை கொள்கையின் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.

 

சட்டவிரோதமாக மக்கள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்வதிலும், அவ்வாறு நுழையும் மக்கள் கடலில்  தம் வாழ்வை பணயம் வைப்பதைத் தடுப்பதிலும், ஆஸ்திரேலியா மேற்கொண்ட பொறுப்பில் திடமாக இருப்பதாக குடி நுழைவு மற்றும் எல்லை பாதுகாப்புத் துறையின் அமைச்சரான பீட்டர் டட்டன் கூறினார்.

 

“கடந்த இரண்டு வருடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட படகுகளை, தன் கடல் பரப்புகளிலிருந்து ஆஸ்திரேலியா அப்புறப்படுத்தி உள்ளது. கள்ளப் படகுகளில் புறப்படும் மக்களை, அவரவர் புறப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் கோட்பாடு தொடரும்,” என்று திரு டட்டன் கூறினார்.

 

“பிராந்திய செயல்முறையை தொடர்ந்து செயல்படுத்துவதிலும் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. இது, கடல் பரப்பில் எடுக்கப்பட்டுள்ள விரிவான நடவடிக்கைகளுக்கு அப்பால், ஆஸ்திரேலியாவிற்கு படகுகளின் மூலம் சட்டவிரோதமாக பயணிக்க முற்படும் மக்களை தடுக்கும் சாதனமாகவும் அமையும்.

 

“நான் தெரிவிக்க விரும்பும் செய்தி என்னவென்றால், கள்ள படகுகளில் ஏறி, ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பயணிக்கும் மக்கள் இரண்டு விளைவுகளையே சந்திக்க நேரும்: வழிமரித்து தடுக்கப்பட்டு ஆஸ்திரேலிய கடல்களில் இருந்து திருப்பி அனுப்பப்படுவர்; அல்லது தக்க செயல்முறைகளைப் பூர்த்தி செய்ய வேறொரு நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

 

“சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் மக்களை ஆஸ்திரேலிய செயல்முறையை உபயோகித்து முறைப்படுத்துவதோ, அவர்களை மறுகுடியேற்றம் செய்வதோ என்றுமே சாத்தியம் இல்லை. இதில் எந்த  விதிவிலக்கும் இல்லை. இவ்விதிகளுக்கு எல்லோரும் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும்.”

 

ஆள் கடத்தல்காரர்களின் உதவியுடன், ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறைகளை பயன் படுத்தி நுழைய முற்படுவர்கள், தம் வாழ்க்கையை மட்டுமின்றி தமது குடும்பத்தினரின் வாழ்க்கையையும் – ஏன், சகலத்தையும் இழக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.