Australian Consulate-General
Chennai, India

Media release

ஜனவரி 20, 2016                                                                                                                                                                                                                                         PA-CN/16/02

 

ஒரு மனிதனின் பெருமுயற்சி – இந்தியாவின் இரு முனைகளுக்கு இடையே  - 60 நாட்கள், 4600 கி.மீ.

ஆஸ்திரேலிய நெடுந்தொலை ஓட்டக்காரர் பேட் ஃபார்மர் (Pat Farmer) என்பவரின் இந்தியாவின் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை ஓடும் பெரும் பிரயத்தனம்

 

புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நெடுந்தொலை ஓட்டக்காரரும் முன்னாள் (ஆஸ்திரேலிய) பாராளுமன்ற உறுப்பினருமான பாட் ஃஃபார்மர் மேற்கொண்டுள்ள அடுத்த ஓட்ட சவால் ‘இந்தியாவின் ஆன்மாவினை பறைசாற்றும் ஓட்டம்’ (Spirit of India Run). இந்த ஓட்டத்தை இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 26, 2016 அன்று தொடங்குவார். தொலைதூர மற்றும் நீண்டநேர ஓட்டங்களில் உலக சாதனைகளைப் படைத்த ஃபார்மர், இந்தியாவின் தென் முனையில் இருந்து வட முனை வரை 4600 கி.மீ ஓடி, பத்து மாநிலங்களை, 60 நாட்களில்  கடக்க உள்ளார்.

 

முன்பு கேப் காமரின் என்று அழைக்கப்பட்ட கன்னியாகுமரி, இந்திய தலைநில பரப்பின் தென்கோடியில், அரபிக்கடலும் வங்கக்கடலும் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது.  ஃபார்மர் இந்த ஓட்டத்தை தொடங்கப்போகும் நாளான ஜனவரி 26, 2016, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும் – இந்நாள், இந்தியாவின் குடியரசு தினம், மற்றும் ஆஸ்திரேலிய தினம்.

 

“ ‘இந்தியாவின் ஆன்மாவினை பறைசாற்றும் ஓட்டம்’, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு இடையே உள்ள உறவினை மேம்படுத்தும் முயற்சியாகும்,” என்று தென்னிந்தியாவின் ஆஸ்திரேலிய தூதரகத் தலைவரான திரு. ஸீன் கெல்லி குறிப்பிட்டார். “நீண்டநேர ஓட்டங்களில் தாக்குப்பிடிக்கும் திறமை வாய்ந்த ஒரு ஆஸ்திரேலிய குடிமகனின் இந்த ஓட்டம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” என்றும் திரு. ஸீன் கெல்லி கூறினார்.

 

கன்னியாகுமரியில் தொடங்கி, இந்தியாவின் மேற்கு கரையோரமாக கேரள மாநிலத்தின் கொச்சி மற்றும் காஸர்கோடு நகரங்களை கடந்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் பகுதி வழியாக கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை ஃபார்மர் வந்தடைவார். வழி நெடுக ஃபார்மருடன் பயணம் செய்யும் படப்பிடிப்புக் குழு, அவரின் ஓட்டத்தை பதிவு செய்யும். “இதன் மூலம், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையினை ஆஸ்திரேலிய மக்களும் உலகளாவிய மக்களும் அறியும் வண்ணம் செய்ய இயலும்,” என்று திரு ஸீன் கெல்லி கருத்து தெரிவித்தார்.

 

இந்த ஓட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையே அன்புடைமை, நட்பு மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பது ஃபார்மர் அவர்களின் நோக்கமாகும். மேலும், மகிந்திரா நிறுவனத்தின் ‘நன்ஹி கலி’ தொடக்க முயற்சியை  முதன்மைப் படுத்துவதன் மூலம் இந்தியாவில் பெண்கல்வித் திட்டங்களுக்காக நிதி திரட்ட உதவுவதும்  ஃபார்மரின் இலக்காகும்.

 

“இந்தியாவின் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை ஓடுவது எனக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது! இவ்வளவு பன்முனைத்தன்மையும் ஆழமான கலாச்சார பெருமையும் கொண்ட ஒரு நாட்டில் நான் இதுவரை ஓடியது கிடையாது” என்றார் பேட் ஃபார்மர். “என் ஓட்டங்களிலேயே இது தான் தலைசிறந்ததாக அமையும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை,” என்றும் கூறினார்.

 

பெண்கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் போது, “இன்றைய இளம் பெண்கள் தான் அடுத்த தலைமுறையின் தாய்மார்கள்” என்றார் திரு. பேட் ஃபார்மர். “பெண்கள் தான் தம் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். ஆகையால், ஒவ்வொரு பெண்ணும் அடிப்படை கல்வி பெறும் வாய்ப்பைப் பெற வேண்டும். கல்வி ஒன்று தான் அவர்களின் வாழ்வையும் உலகத்தின் தரத்தையும் மாற்றும் திறன் படைத்தது.”

 

உபயத்தார் ஆகிய அதானியும், பெண்கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் ஃபார்மருடன் கரம் கோர்ப்பதில் தாம் பெருமை அடைவதாகக் கூறினார்.

 

“அதானி நிறுவனம் தன் இலவச கல்வி திட்டங்கள் மற்றும் ஏனைய முயற்சிகளின் மூலம் கல்வி தரத்தை உயர்த்தி, பெண் குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயிலும் விகிதத்தை அதிகரிக்கும் பணியில் உறுதியாக உள்ளது. இது மட்டும் அல்லாமல், பேட் ஃபார்மர் மற்றும் அதானி நிறுவனத்தின் இந்த கூட்டணி, இந்தியாவின் பன்முகத்தன்மையை அனைவரும் அறியும் வண்ணம் கோடிட்டுக் காட்டுவதன் மூலம், கலாச்சார ரீதியில் இரு நாடுகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது,” என்று ஆஸ்திரேலியாவில் உள்ள அதானி துறைமுகத்தின் தலைவரான கேப்டன் சந்தீப் மேத்தா உரைத்தார்.

 

மகிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, திரு. ஃபார்மர் அவர்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பதில் தம் நிறுவனம் பெரு மகிழ்ச்சி அடைவதாக பெருமிதம் கொண்டார்.

 

“மகிந்திரா நிறுவனம் தன் ‘நன்ஹி கலி’ தொடக்க முயற்சியின் வாயிலாக இந்தியா முழுவதும் 100,000 பெண்களுக்கு கல்வி பயில்வித்து, பெண்கல்வி இயக்கத்தை திண்ணமாக ஆதரிக்கிறது. திரு. பேட் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இந்த ஓட்டம், ஏற்கனவே வலுவாக உள்ள இந்திய-ஆஸ்திரேலிய உறவை மேலும் பலப்படுத்தும்,” என்று திரு. மகிந்திரா கூறினார்.

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு. ஃபார்மர், 2004 ஆம் ஆண்டில் இருந்து 2007 வரை கல்வி, விஞ்ஞானம் மற்றும் பயிற்சி துறைகளின் பாராளுமன்ற செயலராகவும் பணியாற்றி உள்ளார். 2011 – 12 ஆண்டுகளில் வட துருவத்தில் இருந்து தென் துருவம் வரை ஓடி, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தூய-நீர் திட்டங்களுக்காக 100,000 ஆஸ்திரேலிய டாலருக்கு மேல் நிதி திரட்டினார். 2014 ஆம் ஆண்டில், மத்திய கிழக்கு நாடுகளில், இரண்டு வாரங்களில் 1300 கிலோமீட்டருக்கு மேல் ஓடி, நிதி திரட்டியதோடு, அப்பகுதியில் அமைதி நிலவுவதற்கான விழிப்புணர்வையும் உண்டாக்கினார்.